Home » » தி.மு.க. ஆட்சியின் குடிநீர் திட்டங்களை மறைப்பதா?: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. ஆட்சியின் குடிநீர் திட்டங்களை மறைப்பதா?: கருணாநிதி அறிக்கை

Written By Unknown on Thursday, 11 April 2013 | 07:30




தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

21-3-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் 2013-2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 1-4-2013 அன்று பேரவையில் நடைபெற்று, அந்தத் துறையின் அமைச்சரும் பேரவையில் பதிலளித்துவிட்டார். ஆனால் நேற்றைய தினம் (10-4-2013), முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் ஒரு நீண்ட அறிக்கையினை, குடிநீர் வழங்கல் துறைக்கான மானிய விவாதத்தின்போது சொல்லப்பட வேண்டிய அறிவிப்புகளை, இவரே பேரவையில் படித்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 450 கோடி ரூபாய்ச் செலவிலும், தஞ்சையில் 125 கோடி ரூபாய்ச் செலவிலும், கோவையில் 114 கோடியே 25 லட்சம் ரூபாய்ச் செலவிலும், திருப்பூரில் 76 கோடியே 44 லட்சம் ரூபாய்ச் செலவிலும், திருச்சியில் 797 கோடியே 69 லட்சம் ரூபாய்ச் செலவிலும், திருநெல்வேலியில் 227 கோடியே 26 லட்சம் ரூபாய்ச் செலவிலும், கூட்டுக் குடிநீர் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும், தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக ஆக்கப் போவதாகவும், காரைக்குடி, சிவகாசி நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சிகளாக உயர்த்தப் போவதாகவும் 110வது விதியின் கீழ் வேறு சில அறிவிப்புகளோடு சேர்த்துப்படித்திருக்கிறார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவிக்க வேண்டிய இந்தத் திட்டங்களையெல்லாம் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது துறையின் அமைச்சரை அறிவித்திட அனுமதிக்காமல், ஒருசில நாட்கள் கழித்து முதல் அமைச்சரே 110வது விதியின் கீழ் படிக்கிறார் என்றால், அந்தத் துறைக்கு என்று பிறகு எதற்காகத் தனியே ஒரு அமைச்சர்? பாதித்திட்டங்களை முதல் அமைச்சர் படித்து விட்டுப் போகட்டும்; மீதி பாதியையாவது துறையின் அமைச்சர்களை விட்டுப் படிக்கச் சொன்னால்தானே; பாதிக் கடமையையாவது அவர்களுக்கும் நிறைவேற்றிய நிறைவு ஏற்படும்!

முதலமைச்சர் இவ்வாறு இந்த ஒரு துறையின் அமைச்சர் குறித்த விவரங்களை மாத்திரமல்ல, ஒவ்வொரு துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சரே 110வது விதியின் கீழ் படிக்கிறார் என்றால் பிறகு எதற்காக மானியத் துறையின் மீது விவாதம், பதில் உரை எல்லாம்? இனி மேல் ஒவ்வொரு ஆண்டும், நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வது, பொது விவாதம் நடத்துவது, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது, அமைச்சர் பதில் கூறுவது என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை குறித்தும் முதலமைச்சரே 110வது விதியின் கீழ் அறிக்கையைப் படிக்கலாம் என்று முடிவெடுத்து விடலாம் அல்லவா?

மேலும் முதலமைச்சர் தன் அறிக்கையின் தொடக்கத்திலேயே “ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனது (ஜெயலலிதாவின்) ஆட்சிக் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.

இதேபோன்று ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார். இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. நானே பரமக்குடி நகருக்குச் சென்று அந்தப் பெரிய விழாவிலே கலந்து கொண்டேன்.

இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக இராமநாதபுரம், இராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் 27-6-2009 முதல் குடிநீர் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளாகிய புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, ஆலவயல், பொன்னமராவதி பகுதிகளைச் சேர்ந்த 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சியுடன், திருப்பத்தூர், காளையார் கோவில், இளையான்குடி முதலிய பகுதிகளைச் சேர்ந்த 799 குடியிருப்புகளுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊரகப் பகுதிகளுக்கும் தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டது.

இதேபோல் பல்வேறு திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தமிழகச் சட்டப் பேரவையில் தி.மு.கழக ஆட்சியில் குடிநீர்த் திட்டங்கள் எதையுமே கொண்டு வரவில்லை என்பதைப் போலவும், ஜெயலலிதாதான் நரிப்பையூர் திட்டமானாலும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டமானாலும், மீஞ்சூர் குடிநீர்த் திட்டமானாலும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமானாலும், நெம்மேலி குடிநீர்த் திட்டமானாலும் அவைகளையெல்லாம் கொண்டு வந்ததைப் போலவும் பேரவையில் பெருமை பேசிக் கொள்கிறார். அந்தந்தப் பகுதிகளிலே அன்றாடம் இந்தத் திட்டத்தினால் பயன்களை அனுபவித்து வரும் மக்களுக்கு உண்மை தெரியாமலா போய் விடும்?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment