Home » » முன்னாள் எம்.பி. காலமானார்-நாகர்கோவில்

முன்னாள் எம்.பி. காலமானார்-நாகர்கோவில்

Written By Unknown on Saturday 29 June 2013 | 07:38

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்.டென்னிஸ் (84) காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த என்.டென்னிஸ் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கீழ்குளம் அருகே உள்ள பெரியவிளையைச் சேர்ந்த என்.டென்னிஸ் 1962-ஆம் ஆண்டில் உசரத்துவிளை ஊராட்சித் தலைவராகவும், 1967 முதல் 1971-ஆம் ஆண்டு வரை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் இருந்துள்ளார்.
1971-ஆம் ஆண்டில் கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றார். நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 1980, 1984, 1989, 1991-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே தொகுதியில், ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 1996, 1998-ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றார். மொத்தம் 6 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது உடல் அடக்கம் சனிக்கிழமை (ஜூன் 22) பிற்பகலில் அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
ஞானதேசிகன் இரங்கல்
சென்னை, ஜூன் 21: மக்களவை முன்னாள் உறுப்பினர் டென்னிஸ் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: முன்னாள் எம்.பி. டென்னிஸ் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். காமராஜர், மூப்பனார் போன்ற தலைவர்களுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர் அவர். 32 வயதில் கிள்ளியூர் ஒன்றியச் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 37-ஆவது வயதில் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

1971 முதல் 1998 வரை 6 முறை நாகர்கோவில் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment