Home » » பைக் எரிப்பு:புரோக்கர் கடத்தல்

பைக் எரிப்பு:புரோக்கர் கடத்தல்

Written By Unknown on Friday 21 June 2013 | 21:09

சின்னத் தடாகத்தில் கொடுங்கல் வாங்கல் பிரச்னையில் பைக்கை தீயிட்டு எரித்துவிட்டு, செங்கல் சூளை புரோக்கர் கடத்தப்பட்டார். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
மதுரையைச் சேர்ந்தவர் முத்து. இவர் சின்னத் தடாகம் அருகிலுள்ள உஜ்ஜயனூரில் மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இங்குள்ள 30-க்கு மேற்பட்ட செங்கல் சூளைகளில் முன்பணம் பெற்றுக்கொண்டு வேலையாட்களை அனுப்பும் இடைத்தரகராக இருந்து வந்தார்.
செங்கல் சூளை அதிபர்களுக்கும் இவருக்கும் கொடுங்கல் வாங்கல் பிரச்னை இருந்துவந்தது. இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு இவருக்கு போன் வந்தது. அதில் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் பிரிவு அருகிலுள்ள செங்கல் சூளைகளில் தொழிலாளர்- அதிபர்களிடையே பிரச்னை என்பதால் உடனடியாக வர வேண்டும் என்று யாரோ பேசியுள்ளனர்.
முத்து உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார். ஆனால் தொழிலாளர்கள் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து பைக்கில் வீடு திரும்புகையில், சிலர் இடைமறித்து இவரது பைக்குக்கு தீ வைத்துவிட்டு இவரையும் கடத்தி விட்டனர்.

இவரது செல்போன் உடைக்கப்பட்ட நிலையில் அருகே கிடந்தது. தகவல் அறிந்த முத்துவின் மனைவி, துடியலூர் போலீஸில் புகார் அளித்தார். பெ.நா.பாளையம் டி.எஸ்.பி. மோகன், இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment